திங்கள், 13 ஜூன், 2011

தவறு செய்தால்

தோல்வி என்பது வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவரும் சந்தித்தே ஆக வேண்டிய சங்கடமான விஷயம். ஒருமுறைகூட வாழ்க்கையில் தோல்வியே அடையாத மனிதன் எவருமே இருக்க முடியாது. கொஞ்சம் அசந்தாலும் மனிதனை, தலையில் ஓங்கி அடித்து உட்கார வைத்து விடக்கூடியது தோல்வி.
எப்படி அதைச் சமாளிப்பது? எப்படி அதிலிருந்து மீள்வது?
தோல்வியிலிருந்து உங்களைத் தூக்கிவிட இதோ, நான் தரும் நான்கு கேள்விகள்.


முதல் கேள்வி

 
இந்தத் தோல்வி எதனால் வந்தது?
வழக்கமான சில பதில்கள்:
01· அரைகுறைத் தகவல்கள்
02· சரியான மனிதர்களை அணுகாதது
03· சரியான நேரத்தில் அணுகாதது
04· சரியான செயல்திட்டங்கள் இல்லாதது
05· முயற்சிகளில் முழுமையாக இறங்காதது
06· பொறுப்பில்லாத மனிதர்களிடம் பொறுப்பைக் கொடுத்தது
07· முழுமையான ஈடுபாடு இல்லாதது
இது அலசல். அலசலின் முடிவில் சரியான காரணங்களைக் கண்டுபிடியுங்கள்.

2ம் கேள்வி

 
இந்தத் தோல்வி கற்பித்த பாடம் என்ன?
தோல்வியின் காரணங்கள் இவை என்று தெரிந்து கொண்டாலே, கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் எவை என்றும் தெரிந்துவிடும். அந்தப் பாடங்களை மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டும்.
எதற்காக?
மீண்டும் அதே தவறை, அதைப் போன்றதவறைஎந்தக் காலத்திலும் செய்யக் கூடாதல்லவா? அதற்காக.

3ம் கேள்வி

 
 இந்தத் தோல்வியால் ஏற்பட்ட இழப்பு என்ன?

01· பணம்? பரவாயில்லை மீண்டும் பல மடங்கு சம்பாதித்து விடலாம்
02· புகழ்? இதையும் மீண்டும் பெற்றுவிடலாம்
03· உடல்நலம்? இதுவும் மீண்டும் பெறக்கூடியதே
04· காலவிரயம்? ஆகா. இது ஒன்றுதான் மீட்கமுடியாதது. என்ன செய்வது,    ஏற்றுக் கொள்வோம்.
05· தன்னம்பிக்கை? இதை, இதை மட்டும் குறைய விடக்கூடாது. இழந்துவிடக் கூடாது. இது இல்லாமல் எதையும் மீட்க முடியாது.
ஆக, எப்படிப்பட்ட இழப்பானாலும், எவ்வளவு பெரிய இழப்பானாலும் தன்னம்பிக்கை, தைரியம் இவற்றைமட்டும் இழந்துவிடக் கூடாது.
இந்த மூன்று கேள்விகளோடு, அந்தத் தோல்வியை, அந்தத் தோல்வி சம்பந்தமான நிகழ்ச்சியை சுத்தமாக மனதிலிருந்து கழுவிவிட வேண்டும். இறந்தவரை எடுத்துச் சென்றபின் வீட்டைக் கழுவி விடுவதுபோல.

4ம் கேள்வி

 
எப்படி இதை ஈடுகட்டுவது?
ரொம்ப சுலபம். காலிக் குடத்தில் உள்ள காற்றைதண்ணீர் ஊற்றிவிரட்டுகூது போல, அறையில் உள்ள இருளை, அகல்விளக்கு கொண்டு விரட்டுவது போல, தோல்வியை ஈடுகட்டுவதற்கு ஒருவெற்றிதான் வேண்டும்.
· அதற்கு, மூளையைக் குடைந்து யோசிக்க வேண்டும். அதற்காக, வருடக்கணக்காக யோசிக்கக்கூடாது.
· புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
· புதிய வலிமைகளைச் சேர்க்க வேண்டும்
· நுணுக்கமாய்த் திட்டமிட வேண்டும்.
· புதிய தெம்புடன் மீண்டும் முயற்சிக்க வேண்டும்


கேள்விகள் முடிந்தன. பதில்கள் கிடைத்தன. தெளிவு பிறந்துவிட்டது. வழிதெரிந்து விட்டது. அதாவது, சிந்தனை முடிந்துவிட்டது. இனிசெயல் தான்.போட்ட திட்டங்களின்படி, தாமதமின்றி காரியத்தில் இறங்க வேண்டும். காரியங்களை முடிக்க வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன்.

· தோல்விகள் தவிர்க்க முடியாதவை; ஆகவே வருந்த வேண்டாம்
· தோல்வியிலிருந்து மீள வேண்டும்; ஆகவே மன உறுதி வேண்டும்
· தோல்விகளை ஈடுகட்ட வேண்டும்; ஆகவே மீண்டும் முயற்சிக்க வேண்டும்
· தோல்வி – மீண்டும் முயற்சி செய்.
ஆகவே,
தோல்வி கண்டால் நின்று விட வேண்டாம். தொடர்ந்து நடை போடுங்கள். வெற்றி தொட்டுவிடும் தூரம் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக